சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், பொன் அணிகலன்கள் முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை. ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலி புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன.
ஒரு சமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டு எள்ளி சிரித்தவண்ணம் இருந்தார். தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டான்.
அப்போது, ஒளவையார் “கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல் நயம் பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ கம்பரின் பாட்டு’ என்பதற்காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்து சிரித்தேன், எளிமையும் புலமை நலமும் பெற்றவர்கள் இங்கே எளிதில் பாரட்டுப் பெறுவது நிகழாது. இந்த அவையின் மதிப்புக்கு உரியவர்
ஆவதற்குப் பிறபிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது” என்று சொல்லி இந்த செய்யுளை பாடினார்.
விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல் நிறைய மோதிரம் வேண்டும்
அரை அதனில் பஞ்சேனும் பட்டேனும் இருந்தால்
அவர் தம் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று.
விரகர் - நலனை எதிர்பார்த்து துதி செய்பவர்
அரை - இடுப்பு (உடலை பாதியாக பிரிக்கும் என்பதால் அரை எனப்பட்டது. எ.கா :அரைஞான் கயிறு)
அரசவைக்குப் பரிசினை நாடி வந்துள்ள புலவரின் அருகே, தந்திரக்காரர்களாக இருவர் அமர்ந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புலவரது விரல்களுள் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும். அவர் இடுப்பிலே பஞ்சாடையோ பட்டாடையோ கவினுற விளங்குதல் வேண்டும். அங்ஙனமாயின், அவருடைய கவிதை நஞ்சு போல பிறருக்குக் கேடு விளைவிப்பதானாலும், வேம்பினைப் போல கசப்புச் சுவையுடையதாக இருந்தாலும், அதுவே நல்லது என்று இந்த அவையில் ஏற்று போற்ற பெறும்” என்பது பாடலின் பொருள். சோழனின் அவை புலமைக்கு மதிப்புத் தரவில்லை; புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிக்கிறது என்றும் உரைத்தார். இந்த பாடல் இன்றும் பொருந்துகிறது அல்லவா.ஒளவையார் பாடிய பாடலும் பேசிய பேச்சும் சோழனைப் பெரிதும் வருத்தின. கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண்டிருந்தவன் அவன். தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு கலங்கினான்.அவன் ஒளவைக்கு இரு விடயங்களை கூறினான்.
கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்றும் கம்பர் வீட்டு வேலைக்காரி வெள்ளாட்டி கம்பரால் புலமை பெற்றதையும் கூறினான். இவ்விரு விடயங்களையும் ஆராய்வோம்.
கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.
அடுத்த விடயமாக வெள்ளாட்டியின் புலமை குறித்து பார்ப்போம். அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். கம்பர் வீட்டு வாசலில் வெள்ளாட்டி வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள். அம்மா! கம்பர் இருக்கிறாரா? இருக்கிறார். பல புலவர்கள் அவரைக் காண வந்துள்ளனர். அவர்கள் அவரிடம் தமிழின்பம் நுகர்ந்து கொண்டுள்ளனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர், என்று பதில்களை அடுக்கினாள். இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று சொல்லியிருக்கலாம். வாயாடி... எத்தனை பதில் சொல்கிறாள் என்று அவர் அசைபோட்டார். நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா? ஆங்...அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி..சரி...எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுமே என்றாள்.
வட்டமதி போலிருக்கும் வன்னி கொடி தாவுங்
கொட்டுவார் கையினின்று கூத்தாடும்-சுட்டால்
சிவசிவ என்னுமே அம்பல சோமாசி
ஒருநாள் விட்டேன் ஈது உரை
வட்டமதி - வட்டமான சந்திரன்
வன்னி - நெருப்பு
வட்டமாக சந்திரன் போல் இருக்கும் நெருப்பு கொடியாய் படரும் தம்மை அடிப்பார் கையில் நடனமாடும் எரித்தால் சிவ சிவ என சொல்லும் (புலவர் விழிக்கவே) ஒருநாள் யோசித்து சொல்லுங்கள் என்பது இப்பாடலின் பொருள். இதற்குள் கம்பர் வெளியே வந்து, புலவரை அழைத்துச் சென்றார். அவரிடம் வெள்ளாட்டி கேட்ட கேள்வியைத் தெரிந்து கொண்டார். அது ஒன்றுமில்லை , புலவரே! அவள் தட்டும் வரட்டியைத் தான் அப்படி சொன்னாள்.
வட்டமாக சந்திரன் போல் இருக்கும், நெருப்பில் இட்டால் நெருப்பு அதன் மேல் கொடி போல் தாவும், மாட்டு சாணத்தை பந்து போல் உருட்டி அதன் பின் வரட்டியாய் செய்வர். எரித்தால் திருநீறு ஆகும். அதை நெற்றியில் பூசும்போது சிவசிவ என்பார்கள் இல்லையா! அதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறாள், என்றார். கம்பரின் வேலைக்காரிக்கே இவ்வளவு திறனா என்று அம்பலசோமாசி ஆச்சரியப்பட்டார்.
கம்பரின் புலமை குறித்து இவ்விரு விடயங்களும் விளக்குவதாகும் கம்பர் புலமை இல்லாதவரை கூட புலமை பெறக்கூடிய செயற்கரிய செயலை செய்ப்பவராகும் சோழன் கூறினான். கம்பரை பிடிக்காத ஒட்டக்கூத்தரும், புகழேந்தி உள்ளிட்ட மற்ற அரசவை புலவர்களும் இதற்கான ஔவையாரின் பதிலை எதிர் பார்த்தனர். ஒளவைக்கும் சோழனின் பதில் கடும் சினத்தை ஏற்படுத்தியது.
ஒளவையார் மூன்றாம் குலோத்துங்க சோழனை பார்த்து "சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதன் கூட்டின் அடி பகுதி திறந்திருக்கும். ஆனால் முட்டை இட்டால் கீழே விழாது. அதனை செயற்கரிய செயல் என்கிறாயா?.அரக்கு வலிய பசை ஆயினும் குளவிகள் உருக்கி கூடு கட்டுகிறதே அந்த கூட்டினை போல எவராவது செய்வதற்கு இயலுமா? அதனை செயற்கரிய செயல் என்கிறாயா?. பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது! அதனை செயற்கரிய செயல் என்கிறாயா?. தேனீக்கள் கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பும் நுட்பமும் விளங்குகிறது! திரவ பொருளை ஓட்டைகள் நிறைந்து உள்ள கூட்டில் அதுவும் அந்தரத்தில் வைத்திருக்கிறது.அதனை செயற்கரிய செயல் என்கிறாயா? சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ? இவற்றை யாராலுமே செய்ய இயலதுதானே". அதனால், அவற்றையே தொழில் நுட்பத்தில் தலை சிறந்தவை என்று பாராட்டலாமோ? அதற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.
அதனை போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும். கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால், வெண்பாவில் புகழேந்தியார் இருக்கிறார். உலாவில் நம் ஒட்டக்கூத்தர் வல்லவர். இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் உளர். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு. "அஃது அல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது. அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு. ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்ய இயலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும். இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு” என்று இந்த செய்யுளை சொன்னார்.
வான் குருவியின் கூடு வல் அரக்குத் தொல் கரையான்
தேன்(னீ ) சிலந்தி யாவருக்குஞ் செய்தல் அரிதால் - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல்ல வேண்டாம் காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்றும் எளிது
தொல் - பழமையான
"தூக்கணாங் குருவியின் கூடும், குளவியின் உறுதியான அரக்கு கூடும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன் கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது பொருள். ஒளவையாரின் பாடற்கருத்தினை அந்த அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் மறுக்க முடியவில்லை. ஆனாலும் சோழனுக்கு கம்பர் தன் அவையிலே அவமான படுவது பொறுக்க முடியவில்லை.
நிலைமையைச் சோழன் உணர்ந்தான். எனினும், புண் பட்ட கம்பரின் உள்ளத்தைச் சிறிதேனும் மாற்றுதற்கும் விரும்பினான். அதனால், மேலும் சிறிது அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான். 'கம்பநாடாரின் பெருங்காப்பிய பெருமையை நம்மால் மறக்கவே முடியவில்லை. கம்பர் பிறவி கவிஞர் என்ற பெருமைக்கு உரியவர். ஒளவையார் சொல்வதில் உண்மை இருந்தாலும், அவர் கம்பரின்மீது வேண்டுமென்றே குறை காண்கின்றார். அந்தக் குறை கம்பர்பால் இல்லை என்பதனை நாமும் அறிவோம்; நம் நாடும் அறியும் என்றான்.
கம்பரை பிறவி கவிஞர்' என்று சொன்னது, பிறரை அவரினும் தாழ்ந்தவர் என்று கூறியது போல எதிரொலித்தது. அதனால் அந்த நினைவை மாற்றவும், சோழனுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும் ஒளவையார் கருதினார். அதனால், உலகியல் உண்மைகளாக விளங்கும் சில செய்திகளை எடுத்து உரைப்பவரும் ஆயினார். அவர் கூறியதாவுது.
சிறந்த சித்திரக்காரன் ஒருவனைப் போற்றுகின்றோம். அவனுடைய ஆற்றல் அவனுடைய தளராத கை பயிற்சியினாலே வந்தது. அந்தப் பயிற்சிக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தால் மேலும் பலர் சிறந்த சித்திரக்காரர்களாக ஆகியிருப்பர்.
செந்தமிழ் வல்லார் சிலரைக் காண்கிறோம். முறையான தமிழ் பயிற்சி அளித்தால், நாட்டிலே செந்தமிழ் வல்லார்கள் திரளானபேர் உருவாகி விடுவார்கள்.
சிறந்த கல்வி ஞானம் உள்ளவர்கள் என்கின்றோம். அந்த ஞானம் மனத்தை ஒன்றின் பால் உறுதி பெற நிறுத்திப் பழகிய பழக்கத்தால் அமைந்ததாகும். அந்த மனப்பழக்கம் பலருக்கும் ஏற்பட வழிசெய்தால், அவர்களிலும் மிகப்பலர் ஏற்படுவர்.
சிலருடைய ஒழுக்கம்(நடை) நமக்குச் சிறப்பாகத் தோன்றும். அது அவர்கள் நாள் தோறும் நடந்து வருகிற ஒழுகலாற்றின் பழக்கத்தால் அமைந்தனவாகும்.
இவையெல்லாம், இப்படிப் பழக்கத்தாலும் வாழும் சூழ்நிலையாலும் வந்து அமைவனவாம்.இவற்றை பிறவி குணமாகக் கொள்ளுதல் பொருந்தாது.
ஆனால், பிறவிக் குணமாக ஏதும் கிடையாதோ என்று கேட்டால், உண்டு; அவை நட்பு, தயை, கொடை முதலியன. பிறரோடு நட்பு உடையவராகவும், பிறர் பால் இரக்கங் கொள்ளுகிறவராகவும், பிறருக்குக் கொடுத்து உதவுகிற மனமுள்ளவராகவும் ஒருவர் விளங்கினால், அவரை பிறவியிலே திருவுடையார் என்று போற்றலாம். இந்தக் கருத்துகளை அழகிய வெண்பா வடிவில் அமைத்துப் பாடினார் ஒளவையார். இப்பாடலின் முதல் வரியை நீங்கள் அறிந்திருப்பிர்கள்.
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்
வைத்த ஒரு கல்வி மன பழக்கம் - நித்தம் நடையும்
நடை பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
நடை - ஒழுக்கம்
"சித்திரம் எழுதும் ஆற்றல் கைப பழக்கத்தால் அமைவது. செந்தமிழின் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் வருவது. சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச் செல்வம் மன பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது ஒழுக்கத்தில் திறமையைத் தருவதாகிறது. ஆனால் நட்பும், இரக்க குணமும், கொடுக்கும் இயல்புமோ பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்” என்பது இதன் பொருள்.
இது, கம்பரின் புலமையினை பழக்கத்தால் படிந்தது எனக் கூறியும், பிறவிக் குணங்களான நட்பு, தயை, கொடை முதலியன அவர்பால் காணப்படாதவை எனச் சுட்டிப் பழித்ததாகவும் அமைந்தது.
இதனால் சோழ மன்னனின் நிலைமையோ தர்மசங்கடமாயிற்று. ஒளவையாரின் பேச்சிலே உண்மை ஒலிப்பதை அவனும் அறிவான். எனினும், கம்பரை அவர் அடியோடு மட்டந்தட்டி வருவதனை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதனால் அவரை எதிர்க்கவும் மனமில்லை. பொறுமையே வடிவானவர் என நாடு போற்றும் பெரும் புலவரான ஒளவையார், இப்படிக் கம்பரை வம்புக்கு இழுப்பதானால், அந்த அளவுக்குக் கம்பரின் பேச்சோ, செயலோ அவருள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி இருக்கவேண்டும் எனவும் அரசன் உணர்ந்தான். அவைக்கண் இருந்த பிற புலவர் பெருமக்களும் ஏதும் பேசாராய் வாளா இருந்தனர். அவர்களின் மெளனநிலை, அவர்களும் ஒளவையாரின் கருத்தை ஆதரிப்பதாகக் காட்டியது. கூத்தர் இயல்பாகவே கம்பரை விரும்பாதவர். அவர் முகத்திற் படர்ந்த புன்சிரிப்பு பிற புலவர்களுக்கும் புரிந்திருந்தது.
நிலைமையை மேலும் வளர்க்க விரும்பாத சோழன், இறுதியாகக் "கம்பரை வெல்பவர் யார்?" என்றான், ஒரு சவால் போல. அஃது, ஒளவையாரை மீண்டும் சினம்கொள்ளத் தூண்டுவது போலவே இருந்தது.
ஒளவையார் சோழனை பார்த்து "சோழனே கிளி வளர்ப்பார்கள் பெண்கள். அதற்குப்பாலும் பழமும் வைத்துப் பேசவும் கற்றுக் கொடுப்பார்கள். அதுவும் ஒன்றிரண்டு சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும். அந்த ஒன்றிரண்டு சொற்களைப் பேசத் தெரிந்ததும் அதற்கு அளவுகடந்த மகிழ்ச்சி பிறந்துவிடும். தனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது போலத் தன் அறியாமையை உணராமல் வெட்கமின்றிப் பேசிக் கொண்டே இருக்கும். ஆனால் அவ்விடத்தே பெரிய பூனையொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
கிளியின் பேச்சு அறவே நின்றுவிடும். தன் நிலைமை அப்போதுதான் அதற்கு வெளிப்படும். தன் பேச்சு பூனையைக் கொண்டு வந்தது என்பதும் புரியும். உடனே, தன் இயல்பான தன்மை தோன்றக் "கீச்சுக் கீச்சு என்று உயிருக்குப் பயந்து கதறத் தொடங்கிவிடும்" என்றார்.
பின், கல்வியின் சிறப்பு என்பது அடக்கத்திலேதான் இருக்கிறது. இதனை அறியாமல் சிலர் மனம் விரும்பியபடி எல்லாம் பேசுகின்றனர். அது அவர் அறியாமையைத்தான் காட்டும். கற்றோர் அவை முன்னர் பணிவு வேண்டும். பணிவின்றி வாய் திறந்தால் வருவது இழிவுதான். இதனை அறிந்து கொள்க’ என்றார் அவர். சோழன் மெளனியானான். அவையோ ஆரவாரித்தது. ஒளவையாரைப் போற்றியது. அவர் பாடிய பாடல்.
காணாமல் வேண்டியதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய் திறக்கக் கூடாதே
நாணாமல் பேச்சுப்பேச்சு என்னும் பெரும்பூனை
வந்தாக்கால் கீச்சுக்கீச்சு என்னும் கிளி
கற்ற பெரியோரைக் காணாவிடத்தில் அரைகுறை அறிவுடையோர் தாம் விரும்பியபடியெல்லாம் கூச்சல் இடலாம். ஆனால், படித்தவர்கள் முன்பாகப் பணிவின்றி எவருமே தம் வாயைத் திறத்தல் பொருந்தாது. வெட்கமின்றிப் பேசிக் கொண்டேயிருக்கும் கிளியானது, பெரிதான பூனை அந்தப் பக்கமாக வந்தால், தன் பேச்சை மறந்து உயிருக்கு நடுநடுங்கிக் கீச்சுக்கீச்சென்று கதறும். ஆன்றோர் அவையிடத்து, அறியாமல் பேசும் செருக்குடையவர் கதியும், அந்தக் கிளியைப் போன்றது தான்” என்பது பொருள்.
கம்பர் அயர்ந்து போயினார். அரசன் தனக்காக எவ்வளவு பரிந்து பேசியும் தம் புகழை இழித்து பேசினாரே என்று வருத்தம் கொண்டார். இதை போல் எல்லாருக்கும் முன்பு ஒளவையாரை ஒரு வார்த்தையேனும் இழித்து பேசினால்தான் மனம் ஆறும் என்று முடிவு கொண்டார்.
பின் ஒளவையார் மன்னனிடம் விடை பெற்று சோழ நாட்டை சுற்றி பார்க்கும் ஆவல் கொண்டு சோழ நாட்டை கால் நடையாலே வலம் வர தொடங்கினார்.
ஒரு நாள் சோழ நாட்டை சேர்ந்த அம்பர் எனும் ஊர் வழியாகக் கால்நடையாய்ச் சென்று கொண்டிருக்கையில் இடையில் சற்றே இளைப்பார வேண்டி அத்தெருவிலுள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். அந்த வீட்டில் சிலம்பி எனும் பெயர் கொண்ட ஏழை பெண் ஒருத்தி வசித்து வந்தாள். தன் வீட்டுத் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்க கண்டு வீட்டை விட்டு வெளியில் வந்த சிலம்பி ஔவையாரைக் கண்டு நலம் விசாரித்துப் பின்னர் அவர் பசியாயிருப்பதை அறிந்து தான் அருந்த வைத்திருந்த கூழை ஔவையாருக்குக் கொடுத்தாள்.உண்டு உறங்கி கழித்த பின் விடை பெறும் நேரத்தில் சிலம்பியின் வீட்டு சுவற்றிலே இரு வரி வெண்பாவை கண்டார் ஔவையார்.
தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே
என்று எழுத பட்டிருந்தது. அது கண்டு சிலம்பியிடம் ஔவையார்
"மகளே, உன் வீட்டுச் சுவரிலே பாதிப்பாடல் எழுதபட்டு இருக்கிறது. மீதி எங்கே?" என்றார். சிலம்பியோ இவர் படித்த மூதாட்டி என்று அறிந்து அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவளுடைய வேதனையின் காரணமாக அழுகுரலும் தோன்றியது.அப்பெண்ணின் உள்ளத்திற்கு வேதனையூட்டும் ஒரு சம்பவம் அந்தப் பாதிப்பாடலுடன் புதைந்து கிடப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. “அழாதே அம்மா! நின்மனம் இப்படி புண்படும் என்பதனை அறியாது கேட்டுவிட்டேன். என்னைப் பொறுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு, வெளியே செல்லத் தொடங்கினார்.அந்தப் பெண், அவரை உள்ளே அழைத்தாள்; தன் சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள்;
என் பெயர் சிலம்பி, நான் ஏழையானாலும், என் உள்ளம் தமிழ்ப்பாக்களை விரும்பியது. தமிழ்ச் செய்யுட்களை ஆர்வமுடன் கற்று மகிழ்வேன். அந்த ஆர்வத்தால், ஒரு மடமையான செயலையும் செய்துவிட்டேன். "கம்பரின் செய்யுட்கள் இப்போது நாட்டில் பெரிதும் மதிக்கப் பெறுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் வாயால் என்னைப் பற்றி ஒரு செய்யுளைப் பாடச் செய்து கேட்க வேண்டும் என்று விரும்பினேன். விருப்பம் வளர்ந்து, தீராத ஆசையாகவும் உருவெடுத்தது. என்னிடமிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக் கொண்டேன். ஐந்நூறு பொன்கள் தேறின. அவற்றைக கொண்டு கம்பர் பாதங்களில் காணிக்கையாகச் செலுத்தி, அவரிடம் என் விருப்பத்தைக் கூறிப் பணிந்தும் நின்றேன். அவர் ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டுப் பாடுகிறவராம். ஐந்நூறு பொன்னுக்கு ஒர் அரைப்பாட்டினை எழுதித் தந்து, எஞ்சிய தொகையை கொடுத்தால், மீதி செய்யுளை முடித்துத் தருவதாகக் கூறிவிட்டார். என் வேண்டுகோள் எதுவும் பயன் தரவில்லை. அந்தப் பாதி பாடல்தான் அது. என்னைப் பற்றி அதில் ஒரு சொல் கூட இல்லை! என் தோல்வி என் உள்ளத்தைச் சிதைத்து விட்டது. என் உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போயிற்று. இன்னமும் ஐந்நூறு பொன்னுக்கு நான் எங்கே போவேன்?” என்றாள்.சிலம்பியின் கதை ஒளவையாரையும் கண் கலங்கச் செய்தது.
சிலம்பியே நீ பிற தமிழ் புலவர்களிடம் சொல்லி மீதி இரண்டு வரியை முடித்து இருக்கலாமே? என்றார். சிலம்பியோ கம்பர் அரசவை புலவர். அவரை பகைத்து கொண்டால் சோழ நாட்டில் வாழ முடியாது என்று சொல்லி யாரும் வரவில்லை என்று சொன்னார். எப்படியாவது ஐநூறு பொன் சேர்த்து வைக்க தனக்கு ஆசி வழங்குமாறு கேட்டு கொண்டாள்.
ஆசி எதற்கு என் பசி போக்கிய உனக்கு என் தமிழால் மீதி உள்ள வரியை பாட மாட்டேனா? என்றார். அது கேட்டு மகிழ்ந்தாலும் சிலம்பி, பாட்டி தள்ளாத வயதில் அரச பகையும் கம்பர் பகையும் எதற்கு என்றாள். இவள் தன்னை அறியாததாலே இவ்வாறு பேசுகிறாள் என்று நினைந்து ஒளவையார், சிலம்பியே "நானே ஆத்தி சூடி, மூதுரை, கொன்றை வேந்தன் எழுதிய ஒளவையார்" என்றார். சிலம்பியோ ஆனந்த கூத்தாடி முன்னை காட்டிலும் பணிந்து கை கட்டி வாய் பொத்தி என் பாக்கியம் எவர் பெறுவார் என்று கண்களில் நீர் சொரிய மூங்கிலாய் வளைந்து நின்றாள். ஒளவையார் சிலம்பியை பற்றி மீதி பாடல் பாடினார்.
தண்ணீரும் காவிரியே! தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர் சிலம்பி அரவிந்தத் தாள் அணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
தார் - மாலை (வெற்றி மாலை)
அரவிந்தம் - நறுமணம்
தாள் - பாதம்
அம்பர் சிலம்பி - அம்பர் எனும் ஊரில் வசிக்கும் சிலம்பி
புவியிலே நீர் எனப் போற்றப்பெறுவது வளமுடைய காவிரியின் நீரேயாகும். வெற்றிமாலை பூண்ட வேந்தன் சோழனேயாவான். நல்ல நிலவளம் உடையதாகப் புகழப்படுவதும் சோழ மண்டலமே ஆகும். பெண் என்று சொன்னால் அம்பர் ஊரில் வசிக்கும் மிக்க அழகியான சிலம்பியே ஆவாள். சிலம்பு என்றால் சிலம்பியின் மணக்கும் கால்களில் அணிந்திருக்கும் செம்பொன்னாலாகிய சிலம்பே போற்றத்தக்க சிலம்பும் ஆகும்” என்பது பொருள்.
பொன் பெற்றுப் பாடிய பாதி பாட்டு காவிரியையும் சோழனையும் சோழ நாட்டையும் போற்றுவதுடன் நின்றது. ஒளவையார் கூழ் குடித்து விட்டு பாடியதோ சிலம்பியைப் போற்றியதுடன் அமையாது, அவள் கால் சிலம்புகளையும் சேர்த்துப் புகழ்ந்ததாக அமைந்தது.
சிலம்பி வீட்டிற்கு ஒளவையார் சென்றிருந்ததும், தம்முடைய செய்யுளை முடித்து அவளை வாழ்த்தியதும் கம்பருக்குத் தெரிந்து அவர் "கூழுக்கு பாடி குடி கெடுத்தாளே பாவி" என்று சினம் கொண்டு மனதில் ஓர் திட்டம் கொண்டு சோழனிடம் ஓடினார்.
அந்த திட்டத்தின் பெயர் என்னவெனில் "ஒரு நாள் ஒரு லட்சம்" ஆகும் . இந்த திட்டம் காணும் முன் ஒரு முன் நிகழ்வை காணலாம்.
கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் ராமாயணத்தை யார் பாடுவது என்ற போட்டியில், யார் விரைவாகவும் சுவை ஆகவும் பாடுகிறார்களோ அவர்களே பாடலாம் என்றான் சோழ மன்னன். அப்போட்டியில் ஒட்டக்கூத்தரை வென்றவர் கம்பர். கம்ப ராமாயணம் 10,000 பாடலுக்கு மேற்பட்டது. அவ்வளவு விரைவாக ராமாயணத்தை எழுதி முடித்தவர். ஆனால் கம்ப இராமாயணத்தில் சோழனின் பேரை எங்கும் பயன்படுத்த வில்லை. சோழன் தன குருவான ஓட்டகூத்தரை ஆதரித்தான். கமபரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். அதனால் அவர் பெயரையே 1000 பாட்டுக்கு ஒரு பாட்டு வீதமாக அவரை பாடி இருப்பார். இது குலோத்துங்க சோழனுக்கு வருத்தம் தந்தது. ஆகவே தன் பேரை தமிழில் நிலை பெற எக்காரியமும் செய்ய தயாராக இருந்தான். சோழன் அவையிலே கம்பருக்கு இணையாக ஒட்டக்கூத்தர், புகழேந்தியார், ஜெயங்கொண்டார் போன்ற புலவர்கள் இருந்தனர்.
இப்போது "ஒரு நாள் ஒரு லட்சம்" திட்டம் காண்போம். இத்திட்டத்தில் சோழ பேரரசு கீழ் இருக்கும் அனைத்து புலவர்களும் ஒரே நாளில் ஒரு லட்சம் பாடல்களை பாட வேண்டும் என்பது. இந்த போட்டியில் கம்பரை தவிர யார் அதிக பாடல்களை பாட முடியும். ஆகவே கவி சக்ரவர்த்தி என்ற பேரோடு தமிழ் புலவர்களுக்கு எல்லாம் சக்ரவர்த்தி என்ற பேரும் கிடைக்கும் என்று நினைத்தார். திட்டத்தை சோழனிடம் விவரித்த போது சோழன் மகிழ்ச்சியில் "எல்லை இல்லா தமிழில் ஏதேனும் ஒரு மூலையில் எனக்கும் ஓர் இடம் உண்டு, இதில் எள்ளளவும் ஐயம் இல்லை கம்பரே" என்று இத்திட்டம் குறித்து போற்றினான்.
இத்திட்டத்தை ஒட்டக்கூத்தரிடம் விவாதித்தான். ஒட்டக்கூத்தருக்கு கம்பரின் உள்நோக்கம் புரிந்தது. அவரும் ஒரு சூழ்ச்சி செய்தார். அவர் சோழனிடம் ஒரு லட்சம் என்பது தமிழ் புலவர்களின் பெருமையை குறைக்கும் படியாக இருக்கிறது. ஆகவே அதை ஒரு கோடி என்று அறிவிக்க வேண்டும் என்றார். சோழனும் கம்பரும் திகைத்து போனார்கள். சோழன் "இது சாத்தியமா" என்று கூத்தரிடம் வினவினான். கூத்தரோ கம்பரை எள்ளும் வகையில் குறு நகையுடன் "மன்னா, கம்பர் ஒருவரே ஒரு கோடி பாடல்களை பாடும் வல்லமை கொண்டவர். அவர் இருக்க பயம் ஏன்" என்றார். சோழன் மீண்டும் கூத்தரிடம் "கூத்தரே இதனால் பழி ஒன்றும் நேராதே" என்றான். கூத்தர் பெருமான் "தமிழ் வாரிதி கம்பரையே கேளுங்கள்" என்று கம்பரை நோக்கி கை காட்ட அவரோ கூத்தரை மனதில் திட்டி கொண்டு ஆம் என்று சொல்லாமலும், இல்லை என்று சொல்லாமலும் ஒரு புது விதமாக தலையை மட்டும் ஆட்டினார்.கம்பர் மனதிலோ இத்திட்டம் தோற்று போனால் நம்மை எல்லா புலவர்களும் பழிப்பார்களே என்ன செய்வதென்று முழிக்க, சோழனும் குழப்பத்துடன் "ஓரு நாள் ஒரு கோடி" திட்டத்தை நாடு முழுவதும் அறிவித்தான். திட்டம் கேட்டு சோழ பேரரசுவின் கீழ் இருக்கும் தமிழ் புலவர்கள் சோழனை திட்டி தீர்த்தனர்.
திட்டத்தை நிறைவேற்றும் நாளும் வந்தது. தமிழ் புலவர்களும் சோழ அவையிலே கூடி சோழனிடம் நேரடியாக "இது முட்டாள் தனமான திட்டம்" என்று வாதிட முனைந்தனர். கம்பரோ, சோழன் எங்கே நம்மை கை காட்டி விடுவானோ என்று நினைந்து பயத்தில் அமர்ந்திருந்தார். கூத்தருக்கோ மகிழ்ச்சி. சோழனோ "புலவர்களே என் பெயர் தமிழில் நிலை பெற வேண்டும், ஆகவே தயவு செய்து பாடுங்கள்" என கோரிக்கை விடுத்தான். புலவர்களோ "மூடன் ஒருவன் முழங்கையால் மூடாத கூரையை(வானம்) அளப்பது போல் உள்ளது இத்திட்டம்" என்றனர். குலோத்துங்கனுக்கோ இது சினத்தை ஏற்படுத்தவே "தமிழில் சங்கம் வளர்த்தவனை விட சிங்கமென நான் உயர அதனை அங்கமென கொண்ட நீங்கள் எங்கனமாவுது பாட வேண்டும்" என்றான். புலவர்களோ "களிறு களம் கண்ட பின் அதன் காலினால் எழும்பும் தூசுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது போல் இருக்கிறதே மன்னவா" என்றனர். மன்னனோ "உங்கள் வயிறு காயும் முன் இச் சோழன் நெற்பயிர் கொண்டு கொடுத்தேனே அதற்கு இதுவோ நன்றி கடன்" என்றான். புலவர்களோ "கம்பு கொண்டு சிலம்பம் செய்வர். ஆனால் இங்கே கம்பு கொண்டு கூத்தாடுகின்றனர்" என்று கம்பரையும் கூத்தரையும் நோக்கி பாய சோழன் அவர்களை நோக்கி "புலவர்களே அவர்கள் முத்துகளை ஈனும் சிப்பிகள். உங்களை போன்ற ஈன பிறவியையும் தமிழ் அன்னை ஈன்றாள் என்பது வெட்க கேடு" என்றான். இது கேட்ட புலவர்கள் கொந்தளித்து மானம் அழிந்ததென்று கைகலப்பில் ஈடுபட முனைந்தனர். இது கண்ட சோழன் "தமிழை மழை போல் பொழியாத நீங்கள் என் குடையின் கீழ் நில்லாதீர்கள். ஒரு கோடி பாடலை நொடியில் பாடுபவரே இச் சோழ மண்ணில் நெடிது வாழ தகுதி கொண்டவர்" என்றான். அப்பொழுது ஒரு குரல் "ஒரு கோடி பாடல் என்ன, நான்கு கோடி பாடல் பாடுகின்றேன்" என்றது. புயல் போன்ற அவை தென்றலாகி குரல் வந்த திசை நோக்கியது. அங்கே ஔவையார் தமிழ் அருவியாய் நின்றிருந்தார்.
ஔவையை கண்டவுடன் அவன் ஒருவனே பிறவி கடலை கடந்தவன் போல் மகிழ்ந்த சோழன் "என் சினம் கெடுத்த ஒளவையே, மனம் குளிர வரவேற்கிறேன் சோழர் இனம் மகிழ பாடுக" என்றான். ஔவையார் பின் வருமாறு உள்ள பாடலை பாடினார்.
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"
தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம் மனையில்
உண்ணாமை கோடி பெரும்"
"உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும்.
"கோடி கொடுப்பினும் குடி பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
கோடிப் பொன் கொடுப்பராயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு கூடியிருப்பது கோடி பெறும்.
"கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நா
கோடாமை கோடி பெறும்"
எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவானது கோணாதிருந்தால் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.
பாடலை பாடி முடித்த உடன் அவையில் கூடியிருந்த புலவர்களின் கரகோசம் விண்ணை பிளந்தது. கம்பரும் கூத்தரும் நிம்மதி பெருமூச்சு எறிந்தனர். சோழனும் மகிழ்ந்தான். ஆனாலும் அவன் முழு மகிழ்ச்சி அடையவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. பெருங்கடலை எதிர்பார்த்த அவனிடம் சிறு பனி துளிகளை வீசி எறிந்து வெற்றி பெற்றாராரே ஔவையார். கம்பர் இதை பயன் படுத்தி கொள்ள அடுத்த திட்டம் தீட்டினார்.
அந்த திட்டத்தின் பெயர் "கிழி பொற்கிழி" திட்டம் ஆகும். இத்திட்டம் என்னவெனில் ஒரு பொற்கிழியை கம்பத்திலே தொங்கவிட்டு அதை தமிழ் கவியின் மூலமாக விழ செய்ய வேண்டும். இச்செயலை சாதாரண புலவர்களால் செய்ய இயலாது. தெய்வீக புலவர்களால் மட்டுமே செய்ய இயலும். கம்பர் ஒரு தெய்வீக புலவர் ஆவார். அது குறித்து காண்போம்.
கம்பர் இராமாயணத்திற்கு சற்றும் தொடர்பில்லாத இரண்ய வதை படலத்தை அதனுடன் இணைத்த பொழுது அங்கே குழுமியிருந்த அறிஞர்கள் இன்னொரு புராணத்தை இராமாயணத்தில் கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பொழுது திருவரங்க கோயிலில் உள்ள "மேட்டு அழகிய சிங்கர் (நரசிம்மர்)" அதற்கு தன் கர்ஜனை மூலம் கம்பருக்கு ஆதரவு தெரிவித்தார். வைணவ காப்பியமான இராமாயணத்திற்கு சைவர்களான தில்லை வாழ் அந்தணர்கள் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை வந்த போது அங்கே கூத்தனுடன்(சிதம்பரம் நடராசர்) நித்தம் துயிலும் கோவிந்தராஜ பெருமாள் அவருக்கு உதவி புரிந்தார். மன்னருடன் விருந்து உண்ணும் பொழுது அம்பிகாவதி பாடிய காதல் பாடலால் அவன் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் கம்பரின் வேண்டுகோளால் சரஸ்வதி தேவி வந்து காப்பாற்றினார். மேலும் அவர் கவிதை பாடும் திறன் காளியினால் கிடைத்தது என்று கூறுவாரும் உளர். ஆகவே இத்திட்டத்தில் நிச்சயம் வெற்றி தமக்கே என்று நம்பினார.
இத்திட்டத்தை குலோத்துங்க சோழனிடம் கூறினார். அமிர்தம் கண்ட அசுரன் போல் "கம்பரே என் எண்ணம் அறிந்து தேன் கிண்ணம் போல் கொண்டு வந்தீர். இத்திட்டம் வெற்றி பெறுவது திண்ணம்" என்று கன்னம் விரிய உரைத்தான். இத்திட்டத்தை ராஜகுருவான கூத்தரிடம் விவரித்தான். கம்பரை மிகவும் அறிந்தவர் அல்லவா அவர். வழக்கம் போல் அவரும் ஒரு சூழ்ச்சி செய்தார். அவர் சோழனிடம் "ஆழ் கடலில் முத்தெடுப்பவன் சபையிலே விஷ்ணு சித்தர் நித்தியம் ஏதென்ற கேள்விக்கு நித்தம் பாற்கடலில் துயில்பவனே சத்தியம் என்று உரைக்க கற்சிலையில் கட்டப்பட்ட மொத்த பொற்காசுகளும் பெரும் சத்தத்துடன் வீழ்ந்ததை அறிவாய் அல்லவா நீ" என்றார். சோழனோ "ஆம் கூத்தரே அது போன்றதே இந்த நிகழ்வும். இதனால் சோழ சபைக்கு பெருமை தானே" என்றான். கூத்தரோ "மன்னா.. பங்கய(தாமரை) ஆசனத்திற் கூடும் பசும் பொற் கொடி ஆனவள்(திருமகள்) அங்கயற் கன்னி(மீனாட்சி) நாட்டை விட உன் உள்ளங்கையில் அல்லவா கொழிக்கிறாள்" என்றார். சோழன் "ஆம் கூத்தரே. பொங்கும் பொன்னியின்(காவிரியின் இன்னொரு பெயர்) மங்காத அருளாலே பொன்னியும்(திருமகள்) சோழர் கன்னி ஆவாள்" என்று மொழிந்தான். "அங்ஙனம் இருக்க ஒன்றை கட்டுவானே ஐந்தை கட்டு" என்றார் கூத்தர். சோழனோ மிக மகிழ்ந்து "கன்றாத வளமையான சோழ நாட்டில் குன்றாத இளமையான தமிழில் மங்காத பெருமை உங்கள் கன்றான இச் சோழனுக்கு வழி காட்டும் உரை உரை இது. மிக அருமை கூத்தரே" என்றான். கூத்தர் மனதில் கம்பரை தோல்வியுற செய்து ஔவையாரை வெற்றி பெற செய்ய, என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார். கூத்தரும் சாதாரண புலவர் அல்ல. அவர் பெருமையை காண்போம்.
செங்குந்தர் மரபில் உள்ளோர் கூத்தரிடம் தங்கள் குல பெருமையை பாட வேண்டிய போது "நரம்பில் இசை மீட்டும் நாராயணின் மருமகளை பாடும் நாவால் நர சாதியை பாட சொல்கிறீர்களா" என்று சினம் கொண்டு "உன் குலத்தின் தலை மகன் ஆயிரம் சிரம் கொண்டு வா அதன் பின் நான் தமிழ் சரம் தொடுக்கிறேன்" என்று இயம்பினார். செங்குந்தரும் தங்கள் குல தலை மகனின் ஆயிரம் சிரம் கொண்டு தர வேறு வழியின்றி கலைவாணியின் அருளால் வெட்டிய சிரம் அதனை ஓட்டுவித்து அவர்களுக்கு உயிர் கொடுத்து அவர்கள் வேண்டுகோளை நிறைவேற்றினார். கலைவாணியின் அருளால் நிகழ்ந்த இந்த தலை ஓட்ட வைக்கும் கூத்தினால் "ஓட்ட கூத்தர்" என பெயர் பெற்றார். சரஸ்வதி கோயில் இருக்கும் கூத்தனுர் இவரது பெயரையே தாங்கி இருக்கிறது. அந்த ஊர் சோழன் இவர் பாடலுக்கு வழங்கிய கொடை ஆகும். மேலும் இவர் தன் பாடலை எழுத தன் குலதெய்வமான மாரியம்மனை வரவழைத்து எழுத வைத்தவர். மாரியம்மன் இவர் பாடிய வேகத்திற்கு எழுத முடியாமல் திணற மாரியம்மன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவர்.
ஔவையாரும் சாதாரண புலவர் அல்லர். மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் இணைந்து பாரி மன்னரை கொன்ற பின் பாரியின் மகள்களான அங்கவை மற்றும் சங்கவையிற்கு விநாயகரின் பேரருளால் மூவேந்தர்கள் முன்னிலையிலேயே திருமணம் செய்து வைத்தவர்.அரச சபை நிகழ்வுக்கு வருவோம்.
குலோத்துங்க சோழன் மிக்க மகிழ்வுடன் "போரிலே சிங்கங்களின் அங்கங்களை அறுத்து வென்ற தமிழ் புலிகளே, நாம் களத்திலே கண்ட காயத்திற்கு மருந்து இன்றைய தமிழ் விருந்து" என்று "கிழி பொற்கிழி" திட்டத்தை சபையின் முன் அறிவித்தான்.
பெரும் ஆரவாரத்துடன் புலவர்களும் மறவர்களும் இந்த திட்டத்தை வரவேற்றனர். அரச சபை சாராத புலவர் பெருமக்கள் தங்கள் சார்பாக ஔவையாரே முதலில் பாட வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தனர். சோழனும் மகிழ்ந்து "தமிழ் மூதாட்டியே.. போர்கள வரலாற்றில் வெற்றியை பெற்ற எனக்கு தமிழ் வரலாற்றில் வெற்றிடம் இருந்தது. அது இன்றோடு முடிந்தது. தாங்களே அதை சோழ நாட்டு புலவர்களின் சார்பாக இத்திட்டத்தின் முதல் பாடலை பாடி துவக்கி வைத்து எனக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றான். ஔவையாரும் மகிழ்ந்து பொன்னின் அதிதேவதையான திருமகளைத் தியானித்து பொற்கிழியை பார்த்து போட்டியின் முதல் பாடலை பாடினார்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ஆயிரத்து ஓன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்
பூத்த மலர்த் தண்டாமரைத் திருவே தா தா கோடிக்கு ஒருவர்
உண்டாயின் உண்டென்று அறு
ஆர்த்த - நிறைந்த ( வண்டார் குழலி - வண்டு ஆர் குழல் உடையவள் - வண்டு வந்து மொய்க்கும் கூந்தலை உடையவள், ஆரம் - மலர்கள் நிறைந்த மாலை)
தா தா கோடிக்கு ஒருவர் - தா தா என்று எவ்வளவு கேட்டாலும் தருபவர் கோடிக்கு ஒருவர்
கற்றோர் நிறைந்த அவையில் இருக்க தகுந்தவர் நூற்றுக்கு ஒருவர் ஆவர். ஆயிரத்தில் ஒருவர் தாம் கவியில் புலமையாளராக இருப்பார்கள். அவருள் பேச்சுத்திறனும் உடையவர் பத்து ஆயிரத்துக்கு ஒருவராகவே விளங்குவர். தண்டுடன் குளிர்ச்சியான இதழ் விரிந்து மலர்ந்த செந்தாமரை மலரிடத்தே வீற்றிருக்கும் திருமகளே (பொற் கிழியை பார்த்து) கொடை வள்ளலாகத் திகழ்பவரோ கோடிக்கு ஒருவரைத்தான் காணலாம். இஃது உண்மையாயின், உண்மையென்று காட்டுவதுபோல் நீயும் அற்று வீழ்வாயாக.
பாடல் பாடியதும் ஒரு முடிப்பு அறுந்து வீழ்ந்தது. அவையும் அரசனும் வியந்து மகிழ்ந்தனர். ஆரவாரம் பஞ்சமில்லாமல் எல்லாருடைய நெஞ்சிலும் நிறைந்தது, கம்பரை தவிர.
கம்பர் முகம் மாலையில் காணும் கதிரவன் போல் இருந்தது. சோழன் திட்டம் தந்த தன்னையே முதலில் பாட வைப்பான் என்று எண்ணினார், ஆனால் நிகழ்ந்ததோ வேறு. இருந்தாலும் அடுத்த பாடல் தனக்கு தான் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். அவர் மனதிலோ "இந்த பாடலுக்கு பதில் கிழவி கை தடி கொண்டே அடித்து பொற்கிழியை வீழ்த்தி இருக்கலாம். தான் இடி போன்று தமிழ் முழங்கி ஐந்து பொற்கிழியையும் நொடியில் அறுக்கும் வல்லமை கொண்டவராகவும், வற்றல் கிழவிக்கு வயது முற்றலால் கொற்றவன் வாய்ப்பு கொடுத்தான்" என்றும் நினைந்தார். பின் அடுத்த பாடல் தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தால் தன் பரம எதிரியான ஒட்டக்கூத்தரிடம் சமரசம் செய்ய நினைந்து சைகையால் தான் பாட விருப்பம் தெரிவித்தார். கூத்தரும் புரிந்தும் புரியாதது போலும் குறுநகை புரிந்தார். அவர் மனதிலும் ஒரு திட்டம் இருந்தது. குலோத்துங்கனுக்காக காத்திருந்தார்.
மாபெரும் அதிசயம் கண்ட குலோத்துங்கன் தமிழால் தன் சபை பெருமை உற்றது என்றே மகிழ்ந்து "கூத்தரே அடுத்த பாடலை தாங்கள் பாடுங்கள்" என்றான். இதுதான் சமயம் என தன் திட்டம் துவக்கினார் கூத்தர். அவர் மன்னனை நோக்கி "மன்னா.. ஔவையார்..அரச சபை சாராத புலவர்களுக்காக பாடினாரே அன்றி தனது வாய்ப்பாக பாட வில்லை. அழையா விருந்தாளியாய் அவர் வந்தாலும் நீ இங்ஙனம் பிழை செய்யலாமா. தினையை தேனிலே குழைத்து தமிழுக்கு மலையென தொண்டு செய்த ஔவைக்கு நீ தலை வணங்க வேண்டாமா" என்றார். சோழனோ தன் தவறுணர்ந்து "பித்தனாய் பிழை செய்ய இருந்தேன். தமிழ் பத்தனாக வாய்ப்பளித்தீர். பிழைத்தேன் கூத்தரே" என்றான். பின் ஔவையை நோக்கி "வேழம்(கணபதி) அருள் பெற்ற ஔவையே.. இச்சோழ அவை மகிழ இரண்டாவது பாடலையும் அமிழ்தென தாங்களே பாடுங்கள்" என்றான். ஔவையும் மகிழ்ந்து அடுத்த பாடலை பாடினார்.
அப்பாடலின் கருத்து கைக்கூலி பற்றியதாகும். அந்த நாளில் 'கைக்கூலி வாங்கியவன் பிள்ளையற்றுப் போவான்’ என்று மக்கள் நம்பினார்கள். இந்த அச்சமே பலரையும் கைக்கூலி வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. இந்த உண்மையை உரைக்கிறார் ஒளவையார்.
ஒரு வழக்கின் உண்மை ஒன்றாக இருக்கிறது. பொதுவாளரான ஊர்காரர்களும் அந்த உண்மைக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றனர். எனினும், அதனை ஒதுக்கி விடுகிறான் ஒரு நீதியாளன். எதிர்வழக்காளியின் பொய் வாதத்தைச் சார்ந்து அவன் பக்கமாக நின்று நீதி பேசுகிறான்.இப்படி பேசி கைக்கூலி வாங்கி அவன் அதனை கொண்டு உவக்கின்றான். இச்செயலால் அவன் குடும்பம் பரம்பரைத் தொடர்பு அற்றுப் போவது உறுதி அஃது உறுதியானால் நீயும் அறுவாயாக என்று பொருள் படும் படி உள்ள பாடல்.
உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத்
(உண்மையான வழக்கானது ஒரு புறம் இருக்கவும், ஊராரின் அவை அதற்கு ஆதரவாக இருக்கவும்)
தள்ளி வழக்கதனைத் தான் பேசி - எள்ளளவும்
(அவ்வழக்கினைத் தள்ளிவிடும் முறையிலே தான் எடுத்துச் சொல்லி, கொஞ்சமேனும்)
கைகூலி தான் வாங்கும் காலறுவான் தன் கிளையும்
காலறுவான் -சந்ததியற்றுப்போவான்
(கைக்கூலியினைத் தான் வாங்குகின்றவன் சந்ததி அற்று போவான் அவன் சுற்றமும்)
எச்சம் அறும் என்றால் இறு
( வம்சமற்றுப் போவது உண்மையானால், நீயும் அற்று வீழ்வாயாக)
இந்த பாடல் முடிந்த உடனே சோழ அவையின் ஆரவாரத்துடன் இரண்டாவது பொற்கிழியும் அறுந்து வீழ்ந்தது.
குடுகுடு கிழவி கடகடவென இரண்டு பொற்கிழி வீழ்த்தி மளமளவென அவையோரின் புகழ்ச்சியை பெற்றாளே என கம்பர் மனதிலே நினைந்து கடுகடுவென ஆனார். அடுத்த பாடலுக்காக தன் இருக்கைக்கு அருகிலே அமர்ந்திருந்த பரம வைரியான கூத்தரிடம் இரு கை கூப்பி "கூத்தர் பெருமானே அடுத்த மூன்று பாடல்களை நான் ஒரு கை பார்க்க விரும்புகிறேன். அதற்கு தாங்கள் தான் அருள வேண்டும்" என்றார். கூத்தரோ "இப்பொழுது நீர் என் காலில் விழுந்தீரா" என்றார். அதன் உட்பொருள் புரிந்து சட்டென தன் இருக்கைக்கு திரும்பினார் கம்பர். அந்த உட்பொருளுக்கு உரிய நிகழ்வு யாதெனில் ஒருநாள் கூத்தரும், கம்பரும் ஆற்றங்கரை ஒன்றின் படித்துறையில், கொஞ்சம் தள்ளித் தள்ளி நின்று கை, கால், முகம் கழுவிக் கொண்டு இருந்தனர். அப்போது தண்ணீர், ஒட்டக்கூத்தர் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து, கம்பர் நின்று கொண்டிருந்த இடம் நோக்கிப் போய்க் கொண்டு இருந்தது. இதைக் கண்ட கூத்தர், கம்பரை எள்ளும் பொருட்டு "கம்பரே, நான் கால் கழுவின கழுநீர் தான் உனக்கு வருகிறது பார்த்தீரா?" என்றார்.அதைக் கேட்ட கம்பர், "அட! நீரே வந்து என் காலில் விழுந்தால், நான் என்ன செய்வது?" என்றார். இதனை உணர்த்தும் பொருட்டே கூத்தர் "இப்பொழுது நீர் என் காலில் விழுந்தீரா" என்றார். கூத்தரின் இச்செயலால் கம்பர் குலை தள்ளிய வாழை போல் அவமானத்தால் தலை குனிந்து இருக்க, கூத்தரோ அடுத்த பாடலையும் ஒளவையாரை பாட வைக்க திட்டம் தீட்டினார்.
குலோத்துங்கன் அவையின் ஆரவார அலை அடங்கிய பின்னே "கூத்தரே அடுத்த பாடலை தாங்கள் பாடுங்கள்" என்றான். கூத்தரோ "மன்னா..நீர் அறிந்த வள்ளல்களை பற்றி கூறுவாயாக" என்றார். குலோத்துங்கனோ அடுத்த பாடலில் கூத்தர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்றெண்ணி மிக பெருமையுடன் "சூரிய குல தோன்றலான ராமருக்கு முன்னோரான சிபி சக்ரவர்த்தி புறாவுக்கு தன் உடல் தந்து சோழ சக்ரவர்த்திகளிலேயே பெரும் வள்ளல் ஆவார், மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும் தமிழுக்கு தலை கொடுத்த குமணனும் வான் புகழ் வள்ளல் ஆவர்" என்றான். கூத்தரோ அவன் கூறியதை கேட்டும் கேளாதது போலும் இருந்தார். அவர் வேறு யாரையோ எதிர்பார்க்கிறார் என்றே நினைந்து பின் அவர் எதிர்பார்க்கும் நபரை உணர்ந்து அமைதி ஆனான்.அவையும் ஒன்றும் புரியாமல் அமைதி ஆனது.
சிறிது நேரத்திற்கு பிறகு குலோத்துங்கன் "கேட்டு தருபவது வள்ளல்தன்மை கேளாமல் தருவது தாளாண்மை. முல்லைக்கு தேர் கொடுத்த வேள் பாரி ஒருவரே அதற்கு தகுதி ஆனவர். என் முன்னோர்கள் சேர மற்றும் பாண்டியரோடு இணைந்து அவரை கொன்றார்கள். அவர் மகள்களான அங்கவை மற்றும் சங்கவைக்கு தொல்லை கொடுத்தார்கள். இச்செயல் தேவர்களுக்காக அசுரர்களுடன் போர் புரிந்தவரும் மகாபாரதத்தில் கண்ணனால் கொல்ல முடியாத காலயவனனை அழித்தவருமான சோழ மாமன்னர் முசுகுந்த சக்ரவர்த்தியின் பெருமைக்கும் மற்றும் மகன் என்றும் பாராமல் பசுங்கன்றுக்கு நீதி வழங்கிய மனு நீதி சோழன் பெருமைக்கும் மற்றும் 72 மாட சிவாலயம் கட்டிய கோச்செங்க சோழன் ஆகியோரின் வழி வந்த சோழ பரம்பரைக்கும் தீரா களங்கம் ஆகும்.
ஆரவாரித்திருந்த அவை குலோத்துங்கன் பேச பேச அமைதி காத்தது. அந்த அமைதி அவன் எடுக்க போகும் முடிவுக்கு மொழியில்லா ஆதரவை தந்தது. குலோத்துங்கன் நிதானமாய் "அடுத்த பாடல் தாளாண்மை மற்றும் வள்ளல் தன்மை பற்றியதாக விளங்க வேண்டும். அதை பாரியின் நண்பரான ஒளவையாரே பாட வேண்டும்" என்றான். பின் ஒளவையை நோக்கி "இரவிலே பிரகாசமாய் விளங்கும் நிலவுக்கு களங்கமாய் சோழ பேரரசுக்கு பாரியின் பலி உள்ளது. அந்த பழி நீங்க நீங்களே மூன்றாவுது பாடலை பாட வேண்டும்" என்றான். கூத்தர் தன் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் அமர்ந்தார்.
மீண்டும் எழுந்த அவையின் ஒலியினூடே ஒளவையின் மூன்றாவுது பாடலின் ஒலி ஒலிக்க தொடங்கியது. அப்பாடலின் பொருள் யாதெனில்
வளமான ஒருவன், வாடியவன் தன்னை எதுவும் கேளாதிருந்த போதும், தானே வலியச் சென்று அவனுக்கு மனமுவந்து உதவுகின்றான். இது தாளாண்மை ஆகும். அவன் சென்று கேட்கும் போது மட்டும் ஒருவன் வழங்குகின்றான் என்றால், அது வள்ளன்மை எனப்படும். பல நாட் பின் தொடர்ந்து சென்று கேட்டுவர, இறுதியில் அவனுக்கு உதவுகின்றான் என்றால், அது அவனுடைய நடைக்கு கிடைத்த நடை கூலி என்றுதான் சொல்லப்படும். மற்றொருவன், இரக்கமற்ற செல்வன், பலமுறை சென்று இரந்தும், தருபவன் போலக் காட்டிக் காட்டிப் பொய்த்தான் என்றால் அவனது செயல் பழிச்செயல் ஆகும். அஃது அவனை மட்டும் வாட்டுவதுடன் நின்றுவிடாது; அவன் குடியே தொடர்பு அற்றுப்போகும். இது இவ்வுலகில் நடப்பது உண்மையானால், அற்று வீழ்க
தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப்
பின் சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும்
பொய்த்தான் இவன் என்று போனால், அவன் குடி
எச்சம் இறுமேல் இறு
தண்டாமல் ஈவது தாளாண்மை - கேளாத போது ஒருவனுக்குத் தாமே வலிய வழங்குவது சிறந்த கொடையாகும்
தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை -கேட்டு அடைந்தபோது ஒன்றைக் கொடுப்பது வள்ளன்மையாகும்.
அடுத்தடுத்துப் பின் சென்றால் ஈவது காற்கூலி - மீண்டும் மீண்டும் தொடர்ந்து போய்க் கேட்ட பின் தருவது கால்நடைக்குத் தருகின்ற கூலியாகும்
பின்சென்றும் பொய்த்தான் இவன் என்று போனால், அவன் குடி எச்சம் இறுமேல் இறு - பின்னாகச் சென்றனிடத்தும் கொடாது ஏமாற்றி னான் இவன்’ என்று ஒருவன் போய்விட்டால், அப்படிப் பட்டவனின் குடி சந்ததி அற்றுப்போகும் என்பது உண்மை யானால், நீயும் அறுந்து வீழ்வாயாக.
இந்த பாடல் முடிந்த உடனே மூன்றாவுது பொற்கிழி அறுந்து வீழ்ந்தது. அவையும் மகிழ்வுடன் ஆரவாரித்தது.
அவையின் ஆரவாரம் கண்ட கம்பர் இவர்கள் இன்னும் தமிழ் சுவையை அறியவில்லை என்றே நினைந்து அடுத்த இரண்டு பாடலை தான் பாட வேண்டும் என்று கூத்தரை கடந்து குலோத்துங்கனை அணுக முனைந்தார். அவர் அவனை பார்த்து "சோழர் குலம் விளங்க வந்த குலோத்துங்கா, தமிழர் குலம் விளங்க வந்த கவி சக்ரவர்த்தி ஞான் இதில் களம் காண விழைகிறேன்.ஔவை தள்ளாமையினால் ஒரு பாடலுக்கு ஒன்று என்ற வீதத்தில் வீழ்த்தி வருகிறார். கள்ளமில்லா தமிழை உள்ளத்தில் வெள்ளமென கொண்ட நான் ஒற்றை கவி துள்ளளிலே இரு பொற்கிழி மட்டும் அல்ல, அதை தாங்கி இருக்கும் கம்பத்தையும் அதன் பிம்பத்தையும் சேர்த்தே பெயர்த்து தள்ளுவேன்" என்றார். குலோத்துங்கனோ "உங்கள் கவி திறன் அறிவேன் கம்பரே. ஆனாலும் தலைமை புலவரான கூத்தர் அது பற்றி முடிவு செய்வார்" என்றான்.
கூத்தர் என்ற பெயரை கேட்டவுடன் அவர் ஏற்கனவே தன்னை இழிவு செய்தமையால் சினத்தீயின் உச்சத்தில் "கூத்தர் என்றாலே எளியோரை எலி போல் காலால் மிதித்து அவர் மேல் நடனம் ஆடுபவர்தானே" என்றார். இது கேட்டு பொங்கிய கூத்தர் "எந்தை (என் தந்தை) சிவனை நிந்தை செய்தவனை எவர் சிந்தை தடுத்தாலும் கந்தை ஆக்காமல் விடேன்" என்று ஊன்றுகோலை தண்டமென கொண்டு கம்பரை நோக்கி எழுந்தார். குலோத்துங்கன் உடனே "கூத்தரே அவர் கூற்றை சேற்றை போல் ஒற்றி புறம் தள்ளுக" என்று கூத்தரை ஆற்று படுத்தினான். கூத்தர் சற்று அமைதியான பின் "கம்பர் வைணவ பற்றால் சைவத்தை பழிக்கிறார். ராமரின் அம்சமான கண்ணனே போர் புரியும் போது நான் முருகனாக இருக்கிறேன் என்கிற போது ராமாயணத்தில் வாலியின் மார்பில் கந்தவேளின் வேல் புகாது என்று எங்ஙனம் எழுதலாம்" என்றார். கம்பர் உடனே எழுந்து "தன் சாதி பெருமையை பற்றி பாடல் எழுதிய கூத்தர் இக்கூற்றுக்கு தகுதி ஆனவர் அல்லர்" என்றார்.
இருவரின் கூற்றையும் உற்று நோக்கிய சுற்றி உள்ள புலவர் கூட்டம் பெரும் புலவர்களுக்கே சாதி பற்றும் சமய பற்றும் இருப்பதை பார்த்து வியந்தனர். அவர்களுக்கு இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு கம்பரின் அகந்தையும் அவருக்கு எதிராக கூத்தரின் செயலும் காரணம் என புரிந்தது. கூத்தரை உயர்வாகவும் கம்பரை தாழ்வாகவும் பார்க்க ஆரம்பித்தனர். கம்பரும் அவர்கள் பார்வையின் எண்ணத்தை அறியாமல் இல்லை. அங்ஙனம் அவர்கள் பார்க்கும் போது கம்பர் அவர்களை பார்த்து விட்டு தன் கால் பதிந்திருக்கும் நிலந்தனை பார்த்தார். அதாவது நீங்கள் என் காலடி மண் என்பது போல அவர் செய்கை இருந்தது. இது அவர்களுக்கு அவர் மேல் மேலும் வெறுப்பை தோற்றுவித்தது.
அவையின் கவனம் சிதறுவதை கண்ட குலோத்துங்கன் "கரு மேகம் பொழியும் மழை நிறமற்றதாகும். பெரும் கவி மழை பொழிபவர்கள் சிறு பிழையினாலே புவியிலே கரும் புள்ளியை பெற்று விடுகிறார்கள். ஆகவே புலவர்கள் இருவரும் தாங்கள் தமிழ் அன்னையின் புதல்வர்கள் என்பதாலும் இது கற்றோர் நிறைந்த அவை என்பதாலும் வாதம் தவிர்த்து தங்களுக்கும் தமிழுக்கும் புகழ் சேதம் ஏற்படாமல் காக்க வேண்டுகிறேன்" என்றான். பின் "கம்பருக்கும் கூத்தருக்கும் வழக்கு வந்தமையால் மீதம் உள்ள இரு பாடல்களை இருவருக்குமே சமமாக பிரித்து வழங்குகிறேன். அதில் முதல் பாடலை கூத்தர் பெருமான் பாட வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றான்.
கூத்தர் பாடும் மன நிலையில் இல்லாததாலும் கம்பருக்கு ஒரு பாடலை குலோத்துங்கன் வழங்கியதை விரும்பாததாலும் தன் பாடலை ஔவைக்கு வழங்க தீர்மானித்தார். அவர் "கதிரவனுக்கு முன்னால் மின்மினி தான் ஒளி வீசுமோ கடலுக்கு எதிராக குட்டையும் சட்டம் பேசுமோ கலைமகளுக்கு முன்னால் புலை மகனும் வாயாடுவானோ. அது ஆகாது என்பதால் என் வாய்ப்பை தமிழ் தாயான ஔவைக்கே வழங்குகிறேன்" என்றார். வான் உறையும் தெய்வம் போல் வாழ்த்தியமை கண்டு கூன் உறையும் ஔவைக்கு மலைதேன் உறையும் பூ கண்ட குளவி போல் அகத்திலே இனிதாய் தைக்க அவளும் புகழ்ச்சியால் நிமிர்ந்தாள். அவையின் ஆரவாரத்தோடு அடுத்த பாடலையும் பதிந்தாள். அப்பாடலின் பொருள் ஆவது யாதெனில்
ஒரு வழக்கு ஏற்படுகிறது. எவன் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவன் சமூகத்தில் மிகச் சாதாரணமானவன். ஆனால், அவனுக்கு எதிர்வழக்கு தொடர்ந்திருப்பவனோ பெரிதும் வலியவன். இந்தச் சமயத்தில், நியாயம் தீர்ப்பவன் முறையாக நடந்துகொள்ளாமல் போனால் நீதி இழந்தவன் அழுது அழுது அவனும் அவன் சுற்றமும் பெருக்கும் கண்ணீர் நீதி பிழைத்தவனின் குடியையே வேரறுத்துவிடும் என்பதாகும்.
வழக்கு உடையான் நிற்ப வலியானைக் கூடி
(வழக்கு உடையவன் நீதி வேண்டி நிற்க, நீதி வழங்குபவன் எதிராளி வலியவன் என்பதாலே அவனுடன் கூடி)
வழக்கை அழி வழக்குச் செய்தோன் - வழக்கு இழந்தோன்
(வழக்கில் நீதியை புறம் தள்ளியவன் வாழ்க்கை ஆனது நீதி இழந்தவனின் )
சுற்றமும் தானும் தொடர்ந்து அழுத கண்ணீரால்
(உறவினர் மற்றும் தான் பட்ட துயரத்தால் அழுத கண்ணீர் )
எச்சம் இறும் என்றால் இறு
(நீதி வழங்குபவனையும் அவன் குடியையும் அழிக்கும் )
இந்த பாடல் முடிந்த உடனே நான்காவது பொற்கிழியும் அறுந்து வீழ்ந்தது. சோழ அவையும் மகிழ்வுடன் ஆரவாரித்தது. கம்பரோ பெருங்குழப்பதில் ஆழ்ந்தார்.
பதிவும் தொடரும்.

எங்கள் மீதுள்ள களங்கம் பாதி தீர ஒளவையார் எங்கள் முன்னிலையில் பாரியின் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இன்று மீதியும் தீர நேரம் வந்தது." என்றான்.

அருமை. அருமை. இனிய தமிழரும் பருக வைத்தார்.
ReplyDeleteஅழகிய கருத்தை அள்ளும் தமிழ் நடை. எவ்வளவு விஷயங்கள்.
கம்பர், ஔவை, ஒட்டக்கூத்தர்
மூலமாக தமிழ் சிரிக்கவும், சினமுறவும், சிந்திக்க வைத்த திறன் அறிந்து வியந்நத போனேன்.
பெருங்காயம் நிலைத்து நிறைவுடன் வாழ்வீர்களாக.
வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே