Skip to main content
சைவ  சித்தாந்தம் அறிமுக உரை
==========================
இது சைவ சித்தாந்தத்திற்கான அறிமுக பதிவு. வேதம் என்பது ஆரியர்களின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதத்தை குறிப்பிட்டாலும், ஆரியர்களே ஏற்று கொண்ட இன்னொரு வேதம் சைவ திருமுறை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆனால் அதை தமிழ் வேதம் என்று சொல்லாமல் திராவிட வேதம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் தமிழ் வேதம் என்றே சொல்வோம்.

சைவ சித்தாந்தம் என்பது தமிழ் சைவ வேதத்திற்கு பின்னால் தோன்றியது. சமயத்தில் வேதத்தின் மூலமாக அந்தத்தை(இறைவன்) அடைதல் வேதாந்தம் சித்தத்தின் மூலமாக அடைதல் சித்தாந்தம். சித்தம் என்றால் அறிவு. சமயத்தில் பகுத்தறிவு பேசியது சித்தாந்தம். சமயத்தில் பகுத்தறிவா என்பது உங்களுக்கு வியப்பை தரலாம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். வேதாந்தம் என்ன கூறுகிறது என்றால்   இந்த உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் பின்வருமாறு

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பூத்தவளே புவனம் பதினான்கையும் - பதினான்கு உலகங்களையும் படைத்தவளே

பூத்தவண்ணம் காத்தவளே - எப்படி அவற்றைக் கருணையுடன் படைத்தாயோ அதே போல் காப்பவளே

பின் கரந்தவளே - பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே(அழிப்பவளே)

கறைகண்டனுக்கு மூத்தவளே - பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - என்றைக்கும் உன்னை விட  மூப்படையாமல் இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே

மாத்தவளே - மாபெரும் தவம் உடையவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே - உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

உலகங்கள் அனைத்தையும் படைப்பதும் காப்பதும் அழிப்பதும்  சக்தியான இறைவனே ஆகும் என்பதே இப்பாடலின் பொருள் ஆகும்.

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுவது யாதெனில்
"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் " என்கிறார். இதுவே வேதாந்தத்தின் கொள்கை ஆகும்.

ஆனால் சித்தாந்தம் என்பது பதி பசு பாசம் என்ற கொள்கையை உடையது. பதி என்பது இறைவன். பசு என்பது இவ்வுலக உயிர்கள்.பாசம் என்பது நம்மை (பசு) இறைவனை அடைய விடாமல் தடுக்கும் மலம் அல்லது மாயை. பசுவாகிய நம்மையும் பாசமாகிய மலத்தையும் இறைவன் படைக்கவில்லை. அது பதியை போல்  அதாவது இறைவனை போல் அதுவும் சுயமே. சிலர் பசுபதி என்று பேர் வைத்திருப்பார்கள். அது பசுவானது பாசத்தை விட்டு பதியாகிய இறைவனை அடைந்ததை குறிக்கும் சொல்லாகும்.

பதிபசு பாசம் என பகரும்  மூன்றில்
பதியினைப் போல்  பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று  அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே.

பதிபசு பாசம் என பகரும்  மூன்றில் -`பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில்

பதியினைப் போல்  பசு பாசம் அனாதி -  பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம்.

பதியினைச் சென்று  அணுகா பசு பாசம் - பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா

பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே.  - பசு, பதியினிடத்து அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும்.


வேதத்திற்கு சமய குரவர்கள் நால்வரான மாணிக்கவாசகர், அப்பர், ஞான சம்பந்தர், சுந்தரர் என்று இருப்பதை போல சித்தாந்தத்திற்கு  சந்தான குரவர்கள் என்று நால்வர் உண்டு. அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறை ஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகியோர். சந்தானம் என்பது  சமஸ்கிருத சொல். அது புத்திரனை குறிப்பது.ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் தந்தை மகன் உறவு கொண்டவர்கள் அல்ல. இவர்கள் தாம் திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்க படுபவர்கள்.அதே போல் இவர்களில் முதல்வர் மெய்கண்டார் மற்றும் மறை ஞான சம்பந்தர் ஆகியோர் பிராமணர் அல்லாதவர். உமாபதி சிவம் அவர்கள் தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவர். பிராமணர் அல்லாதவரை குருவாக கொண்டமையால் தில்லை வாழ் அந்தணர்களால் ஒதுக்கப்பட்டவர். இவர்களுக்கு முன்னரே சைவ சித்தாந்த கொள்கையை  நாம் திருமூலரின் திருமந்திரத்தின் மூலமும் தமிழ் வேதம் தழைக்க வந்த திருஞான சம்பந்தர் சீடர்களின் மூலமும் அறியலாம். வேதாந்த கருத்துக்களை மக்களுக்கு போதித்த  ஞான சம்பந்த பெருமானின் சீடர்கள் சித்தாந்தத்தை மக்களுக்கு பரப்பியது வியப்பிற்குரியதாகும். அதில் முக்கியமானவர் திருகண்ணுடைய வள்ளல் ஆவார். இவர் இயற்றிய ஒழிவிலொடுக்கம் எனும்  நூல் போரூர் கந்தசாமி கோவிலை கட்டிய திரு சிதம்பரம் சுவாமிகளால் உரை எழுதப்பட்டு அவர் காலத்தின் பின்னே வள்ளலார் இராமலிங்க அடிகளால் பதிப்பிக்க பெற்ற சிறப்பு உடையதாகும்.

வள்ளலாரால் பதிப்பிக்க பெற்ற  இந்நூலை அவரே கிழித்து எறிந்த வரலாறும் உண்டு. திருவொற்றியூர் வடிவுடை அம்மன் உடனுறை  தியாகராஜர் பெருமானை தினம் தரிசிக்கும் வழக்கம் கொண்ட வள்ளல் பெருமான் வழியிலே திண்ணையிலே அமர்ந்து தான் பதிப்பித்த ஒழிவிலொடுக்கம் நூலை ஒருவர் படிக்க கண்டு, அதனை உடனே பிடுங்கி கிழித்து எறிந்தார். அந்த அன்பரோ வள்ளலாரை அறிந்தவர் ஆகையால் "ஐயா இது தாங்கள் பதிப்பித்த நூல் அன்றோ என்றார்". வள்ளல் பெருமானோ "இந்நூல் திண்ணையில் உட்கார்ந்து படிப்பதற்கு அல்ல. அப்படி படித்தால் நீ நாத்திகன் ஆகிவிடுவாய். அதனால் கிழித்தேன்" என்றார்.

சித்தாந்தமோ வேதாந்தமோ ஒரு உயிரை முக்தி அடைய வைக்கும் வழியை உரைப்பதாகும். வேதாந்தம் இறைவனை அடைய தோத்திர பாடல்களையும், மாந்த்ரீக, தாந்த்ரீக வழிமுறைகளை கூறும். ஆனால்  சித்தாந்தம் என்பது இந்த சரியை மார்க்கத்தை சாடுகிறது. குறிப்பாக இந்த பாடலில்

நடந்தும் குளித்தும் இது நல்ல நாள் ஊனை
விடும் தொழிலான் மெய் வருந்தி வீடு என்று அடங்காதார்
என்று சுகமே இருப்பர்? இப்போதே துக்கம் இவருக்கு
என்று எதிர் போய் இன்பம் உதிக்கும்

விளக்கம்:
நடந்தும் குளித்தும் இது நல்ல நாள் ஊனை  - பல திருத்தலங்களுக்கு நடையாய் நடந்து புண்ணியம் என்று கூறப்படும் வற்றாத ஜீவ நதிகளான கங்கை போன்ற நதிகளில் நீராடி இது நல்ல நாள் என்று மாமிசம் விலக்கி

விடும் தொழிலான் மெய் வருந்தி வீடு என்று அடங்காதார்  -   விரதம் போன்ற செயல்களால் உடலை வருத்துவதே முக்திக்கான வழி என்று அதனை செய்பவர்கள்

என்று சுகமே இருப்பர்? இப்போதே துக்கம் இவருக்கு - அறியாமை நீங்கி எப்பொழுது மும்மலம் அகற்றி எப்பொழுது சுகமாய் இருப்பார்கள். இப்பொழுது இவர்கள் கொண்ட துக்கம்

என்று எதிர் போய் இன்பம் உதிக்கும்  - என்று தொலைந்து முக்தி கிடைக்குமோ

பொருள்: இந்து மதத்தில் சொல்லபடுகின்ற விரத முறைகளோ தலம் தீர்த்தம் மூர்த்தம் என்ற வகையில் பல இடங்களுக்கு சென்று வழிபாடு செய்வது  முக்தியை தராது. ஆணவம், கன்மம், மாயை  எனப்படுகின்ற மும்மலம் எப்பொழுது குருவின் அருளால் கழற்ற படுகின்றதோ அன்றே முக்தி கிடைக்கும். இதே போல் ஒரு பாடலை சிவ வாக்கிய சித்தர் பாடலில் காணலாம்.

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லும்  மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

பொருள்: இறைவன் எல்லா உயிர்க்குள்ளும் இருக்கிறான். ஆகவே சரியை வழிபாடான கல்லுக்கு நீர் ஊற்றுவதோ மலர்மாலை சூடுவதோ மந்திரம் சொல்வதோ இறைவனை அடைய வழி வகை செய்யாது. உனக்குள்ளே இருக்கும் இறைவனை அடைய முயற்சி கொள் என்கிறார்.

இவ்விரு பாடல்களும் பெரிய புராணத்தில் சொல்லப்பட்ட நாயன்மார்கள் இறைவனை அடைய சென்ற பாதையான சரியை பாதையை இகழ்வதாய் இருந்தாலும் அது ஞான மார்க்கத்திற்கான முதல் நிலையாக கொண்டு அதனை பின்னர் விலக்கல் வேண்டும் என்றே சைவ சித்தாந்தம் கூறுகிறது.

வேதாந்தத்தில் கூறப்படும் முத்திக்கான வழிபாட்டு முறைகளை காண்போம்.

சரியை  - கோவிலுக்கு சென்று இறைவனை தோத்திர பாடல்களால் பாடுவது

கிரியை - இறைவனை அடியார் உருவத்தில் காண்பது. அவர்களுக்கு தொண்டு செய்வது

யோகம் - இறைவன் தன்னுள்ளே இருக்கிறான் என்றும் மற்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்று தன்னையும் பிற உயிரையும் போற்றுவது.

ஞானம் - பேசா அனுபூதி நிலை. இறைவனுடன் இரண்டற கலந்து எப்பொழுதும் இறைவனுடன் இருப்பது.

வேதாந்தம் மேற்குறிப்பிட்ட நான்கு வழிகளிலும் முத்தி பெறலாம் என்று கூறும். ஆனால் சித்தாந்தம் ஞான நிலையை மற்றும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் முதல் மூன்று வழிகளிலும் மும்மலமாகிய ஆணவம், கன்மம்,மாயை என்பது பற்றி இருக்கும். மும்மலம் பற்றி இருப்பவருக்கு முத்தி என்பது கிடையாது என்பது சைவ சித்தாந்தத்தின் கொள்கை ஆகும். ஆனாலும்  இந்த நான்கு வழிகளிலும் முத்தி அடைந்த சிவ அடியார்களை  நாம் காணலாம்.

சரியை - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், ஞான சம்பந்தர் போன்றோர். இவர்களுடையடைய பாடல்களும் இசையும்  இன்று வரை சரியை வழிபாட்டிற்கு  துணை புரிகின்றன

கிரியை  - பெரும்பாலோர்  இதில் வருகின்றனர்.ஒரு சிலரை மட்டும் இதில் குறிப்பிடுகிறேன். திருக்குறிப்புத் தொண்டர், சிறுத்தொண்டர்,  இளையான்குடிமாறார், காரைக்கால் அம்மையார்

யோகம் - திருமூலர், பூசலார்

ஞானம் - மாணிக்கவாசகர்

பாசமானது முதல் மூன்று வழிபாடுகளான சரியை, கிரியை, ஞானம் ஆகிய மூன்றிலும் இருப்பதாயும் அதனால் முத்தி பேறு கிட்டாதென்றும் சைவ சித்தாந்தம் கூறுகிறது. பாசத்தை பற்றி மேலும் அறியும் விதமாக  திருஞானசம்பந்தர் பாடிய முதல் திருமுறையில் இருந்து சைவ சித்தாந்தத்திற்கான  ஒரு பாடல்.

விளையாதது ஒரு பரிசில் வரும்  பசு பாசம் வேதனை, ஒண்

தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்

களை ஆர் தரும்  கதிர் ஆயிரம் உடைய அவனோடு

முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே

பொழிப்புரை :
விளையாதது ஒரு பரிசில் வரும் பசு பாசம்  வேதனை -  ஆன்மாவும்(பசு) ஆணவம் எனப்படுகின்ற  பாசமும் அனாதி. அதாவது விளையாதது. என்றும் உள்ளது. ஆன்மாவானது   நல்வினை, தீவினை  ஆகிய  கன்மம் எனப்படுகின்ற இரண்டாவது பாசத்தால் வேதனை அடைகிறது

 ஒண், தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம் -அந்த வேதனையை நீக்க முயலும்  அறிவானது (ஒண்மை-அறிவு)  மாயை எனப்படும் மூன்றாவது மலமாகும். இம் மும்மலத்தையும் தவிர்க்க பதியாகிய இறைவனது சார்பு வேண்டும். அந்த இறைவனை அடைய

களை ஆர் தரும்  கதிர் ஆயிரம் உடைய அவனோடு - ஒளி(களை)யோடு ஆயிரம் கதிர்களை உடைய கதிரவனோடு வருகின்ற

முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே - சிறிதே தலை காட்டும் சந்திரன் தவழும் முதுகுன்று என்ற இடத்தை அடைவோம்

பொருள்: பசுவானது பிறக்கும் போதே உடன் வருகின்ற ஆணவ மலத்தினாலும், இறைவனால்  வகுக்கப்பட்ட நல்வினை தீவினை ஆகிய கன்ம மலத்தினாலும் வேதனை அடைகின்றது. அந்த வேதனையை நீக்குவதற்கு அறிவாகிய மூன்றாவது மலமான மாயை கொண்டு பதியாகிய இறைவனை சார்ந்தால் நீங்குமாம். இங்கு அறிவும் மாயை எனப்படும் மலமாக கூறப்படுகின்றது. ஏன் என்றால் அந்த அறிவும் அகன்றால் தான் பதியை அடைய முடியும் என்பது பொருளாகும்.

இதை மேலும் புரிந்து கொள்ள ஒழிவிலொடுக்கம் என்ற நூலில் இருந்து ஒரு பாடலை பார்க்கலாம்.

அறியாமை நீங்கி அறிவாய் அறிவே

அறியாமல் ஆயிரண்டும் அற்று பிறியாதார்

தன் இழப்பின் ஞான சமாதிக்கு சாதகராம்

அந் நிலைக்கே ஜீவன் முத்தராம்

பொழிப்புரை:
அறியாமை நீங்கி அறிவாய் அறிவே  - கேவல நிலையாகிய மும்மலமாகிய பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் பசுவானது அந்த அறியாமை நீங்கி அறிவின் துணை கொண்டு பதியை அறிந்து

அறியாமல் ஆயிரண்டும் அற்று பிறியாதார் - அறியாமையும் அறிவும் ஆகிய இரண்டும் அற்று பதியை பிரியாதார்

தன் இழப்பின் ஞான சமாதிக்கு சாதகராம் - ஆணவ மலம் நீங்கி (என்னுடையது என்பது நீங்கி) ஞான நிலைக்கு தகுதி ஆனவராம்

அந் நிலைக்கே ஜீவன் முத்தராம்  - அந் நிலையில் இருந்து ஜீவன் முத்தராகவும் ஆவார்கள்

பொருள்: மும்மலமாகிய அறியாமையை  பதியின் அருளாலே கழற்ற முடியும் என்று அறிந்து அதை செய்த பின்  அந்த அறிவும் பதியை அடைய  தடையாக உள்ளமையால் பதியை பிரியாத நிலையில் அந்த அறிவும் அகன்று ஞான நிலைக்கு உய்வராம். ஞான நிலை கண்ட பின் ஜீவன் முத்தர் ஆகும் தகுதி ஆவார்கள்.

இதே போன்று ஒரு கருத்தை திருமந்திரத்திலும் காணலாம்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு  ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய் வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே

பொருள்:
உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.

 சைவத்தில் வேதாந்தம் என்பது திருமுறை என்றும் சித்தாந்தம் என்பது திருநெறி என்றும் அழைக்கபடுகிறது. சைவ திருமுறைகள் பனிரெண்டு என்றும் அதில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என்றும் அதை பாடிய மூவர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆவர் என்றும் அறிந்து உள்ளோம்.
திருநெறி என்பது மெய்கண்டார் சாத்திரங்கள் என்றும் அறிய படுகிறது. மெய்கண்டார் திருவெண்ணெய் நல்லூரில்  பிறந்தவர் ஆவார். ஆனால் இவர் பிறப்பிற்கும்  திருவெண்காடு திருத்தலத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. திருவெண்காடு திருத்தலம் திருவெண்காடர் என்று அழைக்கப்படும் பட்டினத்தடிகள் வாழ்ந்த இடமாகும்.மேலாக திருஞானசம்பந்த பெருமானால் பதிகம் பெற்ற தலம். பதிகம் என்றால் பத்து பாடல்களை கொண்ட பாடல் தொகுப்பு என்று பொருள்.
"கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்" என்று தொடங்கும் அந்த திருவெண்காடு திருமுறை பதிகம் பிள்ளை பேறுக்கான பதிகமாக கோளறு பதிகத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தினாலே மெய்கண்டார் பிறப்பும் உண்டானது. தொண்டை மண்டலத்தில் உள்ள திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் சைவ வேளாளர் குலத்தாரான அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் மங்களாம்பிகை அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகல ஆகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர்.

சகல ஆகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது. அதில் இருந்து இரண்டாம் பாடல்.


பேய்  அடையா பிரிவு  எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டாம் என்றும்

வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம்  தீவினையே

குறிப்புரை:
========
பேய்  அடையா பிரிவு  எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு  =  பேய்  அடையா - பேய்கள் உங்களை அண்டாது.

பிரிவு  எய்தும்  = அண்டிய பேய்களும் ஓடிவிடும்

பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் = பிள்ளை வரம் மட்டுமல்ல மனதில் உள்ள அனைத்து வரங்களையும் நினைத்தவாறே அடைவர்

 ஐயுற வேண்டாம் என்றும்  = சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும்

வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு = மூங்கில் போன்ற தோள்களை உடைய பராசக்தியின் வலப்பாகத்தை கொண்டுள்ள சிவ பெருமான்   உறையும் திருவெண்காட்டில் உள்ள

 முக்குளநீர் தோய் வினையார்  = முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடியவரை

அவர் தம்மைத் தோயாவாம்  தீவினையே = எந்த தீவினையும் அண்டாது

இப்பாடலில் கூறியபடி அச்சுத களப்பாளரும் அவர் மனைவியும் தொடர்ந்து 40 நாட்கள் திருவெண்காட்டு இறைவனை வேண்டி வந்தனர். ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவுதனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்தத் தெய்வ  தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருபெயரையே வைத்தனர்.  சில சைவ சித்தாந்த கருத்துக்களை பார்த்துவிட்டு மீண்டும் மெய்கண்டாரின் வரலாற்றை காணலாம்.

வேதாந்தமும் சித்தாந்தமும் முத்தி நிலைக்கான வழியையே கூறுகின்றன. முத்தி என்றால் பெரும்பாலோர் இறவாமை என்றே நினைக்கின்றனர். சிவலோக பதவி அடைந்தார், இறைவன் அடி சேர்ந்தார் என்பன போன்ற வாக்கியங்கள் இறவாமை பற்றி குறிப்பவை அல்ல. அவை மீண்டும் பிறவாமை பற்றி குறிப்பதாகும்.

அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் முத்தி பற்றி கூறும் ஒரு பாடலை காணலாம்.


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செஞ்

சடையாளை வஞ்சகர் நெஞ்சு  அடையாளைத் தயங்கு நுண்ணுால்

இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு

என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

குறிப்புரை:
========

உடையாளை = எல்லா உயிர்களுக்கும் அன்னை ஆனதால், அவள் எல்லா உயிர்களையும் உடையவள் அதனால் உடையாளை

ஒல்கு = தளரும், நெகிழும், குழையும்

செம்பட்டு உடையாளை  = சிவந்த (செம்மையான) பட்டு புடவை உடையவளை

ஒளிர் மதி = ஒளி பொருந்திய சந்திரனை

செஞ் சடையாளை = தன் சிறப்பான கூந்தலில் கொண்டவளை

வஞ்சகர் நெஞ்சடையாளை  = வஞ்சகர்களின் நெஞ்சை அடையாதவளை

தயங்கு = தனங்களின் பாரம் தாங்காமல் ஒடிந்து விடுமோ என்று சொல்ல கூடிய

நுண்ணூல் இடையாளை  = நுண்ணிய நூலை போன்ற இடையை கொண்டவளை

எங்கள் பெம்மான் = எங்களுடைய பெருமான் சிவனின்

இடையாளை = இடப் பக்கம் கொண்டவளை

இங்கு என்னை இனிப் படையாளை = இங்கு என்னைப் இனிமேல் படையா வண்ணம் காத்தவளை(பிறவாமை)

உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே = உங்களையும் இனி பிறவா வண்ணம் காக்க அவள் பாதம் சரணடையுங்கள்

இப்பாடலின் மூலம் பிறவாமையே முத்தி என அறியலாம். சைவ சித்தாந்தம் முத்தியில் பல நிலைகள் பற்றி கூறுகிறது. அவையாவன :

1.சாலோகம்  - இது முத்தி அடைந்த பசுவானது, சிவலோகத்தில் வீற்று இருப்பது

2.சாமீபம் - இது பசுவானது சிவலோகத்தில்  இருந்து சிவனுக்கு பணி ஆற்றுவது

3. சாரூபம்  - இது இறைவனை போன்று விளங்கும் ருத்திரர்களில் ஒருவராய் விளங்குவது

4. சாயுச்சியம் - இது முத்தி அடைந்த பசுவானது இறைவன் திருவடியில் வீற்றிருப்பது

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் வேண்டும் முத்தி யாதென்று பின்வரும் வரிகளில் காணலாம்.

அல்லல் பிறவி, அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச், சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


சாயுச்சிய முத்தியையே மாணிக்க வாசக பெருமான் வேண்டுவதை (சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து) நாம் காணலாம்.

மாணிக்க வாசக பெருமான் தன் வாழ்வில் இறுதியாக பாடியது அச்சோப்பதிகம் எனும் பதிகம் ஆகும். அதை பாடி முடித்த பின் அவர் உடல் கரைந்து இறைவனுடன் சேர்ந்தார். இதே பதிகத்தை பாடி முத்தி அடைந்த இன்னொரு பெண்மணி தில்லையாடி  வள்ளியம்மை ஆவார். தென் ஆப்ரிக்காவில் இன வெறிக்கு எதிராக போராடிய வள்ளியம்மையார் சிறையில் இறந்து விட கூடாது என்பதற்காக அவர் கோரிக்கையை நிறைவேற்றி அவரை விடுதலை செய்தனர் வெள்ளையர்கள். வள்ளியம்மையாருடன் போராட்டத்தில் கலந்து கொண்ட காந்தி அடிகள் வள்ளியம்மையின் இறுதி காலத்தை உணர்ந்து அவர் அருகிலே வீற்றிந்தார். அப்பொழுது அம்மையார் அவர்கள் அச்சோப்பதிகத்தை பாட சொல்லி கேட்டு அப்பதிகம் முடியும் தருவாயில் இறைவன் அடி சேர்ந்தார். இதை கண்ணுற்ற காந்தி அடிகள் அப்பதிகத்தை தனது மொழியிலே எழுதி பத்திரப்படுத்தி கொண்டார். அப்பேர் பட்ட
பதிகத்தில் இருந்து முதல் பாடல்.

முத்தி நெறி அறியாத
    மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்தி நெறி அறிவித்துப்
    பழ வினைகள் அறும்  வண்ணஞ்
சித்த மலம் அறிவித்துச்
    சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு  அருளியவா
    ஆர் பெறுவார் அச்சோவே

பாடல் புரியும் படி இருப்பதால் பொருளை மட்டும் சொல்கிறேன்.
பொருள் :
முத்தி  நெறி அறியாத மூடர்களுடன் இருந்த எனக்கு, பத்தி நெறி அறிவித்து என் வினைகள் எல்லாம் ஓடும்படியாக, எனக்கு சித்த மலம் அறிவித்து என்னை சிவமாக்கி என்னை ஆண்ட  அப்பன் சிவன் அருள் புரிந்தான் . அப்பெருமான் அருள் செய்த பேற்றைப் பெற வல்லவர் வேறு யாவர்?

இறை அருளால் பதிவு தொடரும் .

Comments

Popular posts from this blog

ஒளவையாரும் கம்பரும்

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், பொன் அணிகலன்கள்  முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை. ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலி புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன. ஒரு சமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டு எள்ளி சிரித்தவண்ணம் இருந்தார். தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது  தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டான். அப்போது, ஒளவையார் “கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல் நயம் பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ கம்பரின் பாட்டு’ என்பதற்காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்து சிரித்தேன், எளிமையும் புலமை நலமு...

ஒளவையாரின் பிறப்பு

 'ஒளவையார் ஆதி என்பருக்கும்  பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். ஆதி  அம்மையார்  கலக்கமுற்றார். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது. அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள்.குழந்தையை அவ்விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர்.அந்த ஒளவையார் குழந்தை பாடிய வெண்பாவின் பொருள் இதுவாகும்,  'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.” 'இங்ங்னமாகப் பிறப்பிலேயே வாழ்வுக் கதியை வகுத்துவிட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை; அவன் வகுத்த நி...